அந்த லை-யில் ஒளிந்திருக்கும் உண்மைகள்

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அவற்றிற்கான முக்கியத்துவத்தை இழந்து நீண்ட காலமாகிவிட்டது. அதிலும் சமீபகால தேர்தல் அறிக்கைகள் பெரும்பாலானவை வானத்தை வில்லாக வளைப்பதற்கும் பூமியைப் பாயாக சுருட்டுவதற்கும் தான் மணலைக் கயிறாகத் திரிக்கின்றன. எனவே நாம் அவற்றின் பால் அதிகம் அக்கறைக் காட்டுவது ஆற்றல் மற்றும் நேர விரயமாகவே முடியும். ஏனெனில் தேர்தல் நடவடிக்கைகள் முழு வீச்சோடு நடைபெறும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே இந்த தேர்தல் அறிக்கைகளுக்கு உயிர் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த கணத்திலிருந்து அவை சப்பித் தூக்கியெறியப்பட்ட மாங்கொட்டைகள் போல் சூம்பிக் கிடக்கின்றன. உணவு விடுதிகளில் வாடிக்கையாளனைக் கவர்ந்திழுக்கும் பட்டியல் அட்டையைப் போல் வாக்காளனைக் வசீகரித்து அவனுக்கு நப்பாசையைக் காட்டி நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வேலையை மட்டும் செய்து விட்டு ஓரமாக ஒதுங்கி விடுகின்றன தேர்தல் அறிக்கைகள். சாப்பிடும் உணவும் அதற்கு கொடுக்கும் காசும் ஏற்கனவே விதிக்கப்பட்டதுதான்.

ஆயினும் எல்லா தேர்தல் அறிக்கைகளையும் அல்லது அவற்றில் இடம் பெற்றுள்ள எல்லா வாசகங்களையும் அப்படி அலட்சியமாக கருதி புறந்தள்ளிவிட முடியாது. பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நம்மைக் குளிப்பாட்டிக் குதூகலமாய் வைப்பதற்கான வழலைக் கட்டிகள் (Soaps). அறிக்கைகளின் பல்வேறு அம்சங்களை ஆங்கிலத்தில் Sops (தேனில் தோய்த்த அப்பம்) என்றே குறிப்பிடுவதை நீங்கள் பார்க்க் முடியும். ஆனால் சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நம் தலையைத் தடவி பதமாக மிளகாய் அரைப்பவை. அதன் பல அம்சங்கள் விஷத்தில் தோய்த்தெடுத்த சாக்லேட்களாக நமக்கு ஊட்டப்படுவதையும் பார்க்க முடியும். தமிழக சட்டசபை தேர்தல் 2021ஐ யொட்டி கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் அறிக்கைகளில்  பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாம் வெறும் ஓட்டு வாங்கும் காகித கற்றையாக கடந்து போய்விட முடியாது. “தொலைநோக்கு பத்திரம்” என்ற அதன் தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதும் கொஞ்சம் மிரட்டுவதைப்போல் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதிலும் அந்த லை முன்னோக்கி சுழித்த கொம்போடு புதிய தலைமுறையைப் பார்த்து பரிகசிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்து சீர்திருத்தங்களை 1978 – 79 ல் தமிழக அரசு அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டதன் பின்னர் யாரும் லையை இந்த வடிவத்தில் எழுதுவதில்லை. எப்போதும் சீர்திருத்தப் பணிகளுக்கு எதிராக இருப்பவர்கள், பின்னோக்கியேச் சிந்திக்கிறார்கள். அவர்கள் கடிகாரத்தைப் பின்னோக்கி நகரவைப்பதற்குத் தான் அதிக மெனக்கெடுகிறார்கள். தொலைநோக்கு என்பதற்கே இருவகையில் பொருள்கொள்ள முடியும். தொலைநோக்கி வருங்காலத்தையும் பார்க்கலாம்.. இறந்த காலத்தையும் பார்க்கலாம். வேத விஞ்ஞான விற்பன்னர்கள் தங்கள் கருத்தியலுக்குத் தோதாக பின்னோக்கி சிந்தித்து அதனை தமிழகத்தின் மீதும் திணிக்கத் தலைப்பட்டு விட்டனர். அந்த புரிதலோடு தான் அந்த பத்திரம் என்ற வாத்தைப் பாட்டையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும். தமிழ்நாடு பத்திரம் என்பதை நமக்கு எச்சரிக்கையாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேணடும்.     

            ஆக, கார்ப்பரேஷன் குழாயைத் திறந்தால் காலையில் தேனும் மாலையில் நெய்யும் பொங்கி வழிந்தோடும் என்கிற ஜிகினா ஒப்பனைகளைத் தவிர்த்துவிட்டு நமது அடிமடியில் கைவைத்து அழகாக முடிச்சவிழ்க்கிற காரியங்களை மட்டும் பார்ப்போம். முதலாவது விவசாய நலன் சார்ந்து சொல்லப்பட்டிருக்கும் திட்டங்கள், சலுகைகள் ஆகியவற்றை நோக்கும்போது, லட்சக்கணக்கான விவசாயிகள் மாதக்கணக்கில் குளிரிலும் பனியிலும் உறைந்து கிடந்தபோது அவர்கள் மீது ராட்சசக் குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, சாலைகளை வெட்டிப் பள்ளமாக்கி தலைநகருக்குள் நுழையாமல் தடுத்து வைத்தாவது அமுல்படுத்தியே தீருவோம்  என்று வீராப்புக் காட்டிய புதிய வேளாண் சட்டங்களின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட இவர்களின் தொலைநோக்கில் இல்லை. ஏழை விவசாயிகளை வாழவைத்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு போக வாராது வந்த மாமணியான இந்த வேளாண் சட்டங்களின் பராக்கிரமங்களைப் பற்றித்தானே இந்த அறிக்கை பக்கம் பக்கமாக பேசியிருக்க வேண்டும். மாறாக, விவசாயப் பொருட்களுக்கு நியாயமான லாபகரமான விலை நிர்ணயிக்கப்படும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ₹3500/- நிர்ணயிக்கப்படும் என்று வண்ணக் கோலங்கள் படைத்து வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார்கள்.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களில் ஒரு பகுதியான விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020′ (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020). என்கிற சட்டம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலைக் கருத்தில்கொண்டு, விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று அரசு கூறியது. அதாவது, தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விளைவித்த பொருளை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம். ஏற்கெனவே கரும்பு விவசாயிகள் இது போன்று சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் கரும்பு விவசாயம் செய்துவருகின்றனர். தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் 2013 முதல் 2016 வரை மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை விவசாயிகளுக்குத் தராமல், ரூ.1217 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். விவசாயிகளை முதலாளிகளின் அத்துக்கூலிகளாக மாற்றும் இந்த திட்டத்தின் நீட்சியே பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து, கான்ட்ராக்ட் முறையில் விளைபொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக ஏற்படுத்தித்தருகிறது.

இன்றைக்கும் மொத்த விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. எஞ்சியதை விவசாயிகள் வெளிச் சந்தையில் தான் விற்று கொள்ள வேண்டும். அப்படி விற்கையில் வணிகர்கள் வைத்ததுதான் விலை. கடந்த ஜூன் மாதம் 19 தேதி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டாலுக்குக் குறைந்தபட்சம் ரூ.3,500/- அதிகபட்சமாக ரூ.4,500/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முந்தைய வார ஏலத்தில் ரூ.6000/- விற்பனையான பருத்தி அடுத்த வாரமே ரூ.2,500 வரை சரிந்து விழுந்தது. இந்த அடிமாட்டு விலையை ஏற்க மறுத்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்ட பிறகுதான் மறுஏலம் நடத்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். அரசின் கட்டுப்பாடு இருக்கும்போதே வயிற்றில அடித்துப் பிடுங்கும் போக்கு பரவலாக உள்ள நிலையில் முற்றிலும் பெரு நிறுவனங்களின் கைகளில் விவசாய உற்பத்தி சென்றுவிட்டால் விளைவு என்னவாகும் என்பதை விளக்கத் தேவையில்லை. மோடியின் துடிப்பான குஜராத்திலும் (Vibrant Gujarat) பெப்சி நிறுவனம் தனது அனுமதியின்றி, தனது பிரத்தியேக உருளைக்கிழங்கு ரகத்தைத் தன்னோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளாத விவசாயிகள் பயிரிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, பல கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டதும், அதனை எதிர்த்து விவசாயிகள் போராடிய பிறகு அந்நிறுவனம் பின்வாங்கியதும் மற்றுமொரு அனுபவம்.

இவ்வாறான சிக்கல்களை விட்டும் விடுபட அரசு பொது கொள்முதலை விரிவுபடுத்த வேண்டும் என்கிற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு நேர்மாற்றமாக தனியார் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தும் சட்டத்தை இயற்றி, அதை கட்டாயமாக பிரயோகிக்கும் எல்லா நடவடிக்கைளையும் முடுக்கிவிடும் அரசாங்கம், ஒப்பந்த சாகுபடி என்ற சிலந்தி வலைக்குள் விவசாயிகளை ஒட்டுமொத்தமாகத் தள்ளிவிடும் கொள்கை கொண்டதாக செயல்படுகிறது. ஆனால் தேர்தல் களத்தில் மறுபக்கமாக திரும்பி நின்றுகொண்டு விவசாயிகள் நலன் காக்கும் பசப்பு வார்த்தை பேசுகிறது பாசக.

அடுத்ததாக, தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் வலுப்படுத்தவும் தனித்துறை ஏற்படுத்தப் போகிறோம் என்று படம் காட்டியிருப்பதைப் பார்த்துப் பரவசப்பட்டுப் போகிறோம். சென்ற ஆண்டு பெருந்தொற்றுக் காலந் தொடங்கி இன்றுவரை வளைகுடா வாழ் இந்திய தொழிலாளர்கள் படும் துயரங்கள் சொல்லித் தீராதவை. உதாரணமாக, குவைத்தில் கொரானா பரவல் மிகத் தீவிர எல்லைகளை எட்டிவிட்ட நேரத்தில், குவைத் அரசாங்கம் அந்நிய தேசத்தவர்களை நாடு திரும்ப அறிவுறுத்தியது.. நமது பக்கத்தில் உள்ள துக்கடா பங்களாதேசம் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் குடிமக்களை இலவசமாக அழைத்துக் கொண்டபோது, எந்தவித அக்கறையும் காட்டாமல் அலட்சியமாக இருந்த நாடுகள் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே. இதற்கு இந்த இருநாடுகளிலும் மேலோங்கி நிற்கும் பேரினவாத ஆதிக்க அரசுகளே முக்கிய காரணியாகிறது. அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாச்சே என்ற விட்டேத்தியான வெறுப்பு சிந்தனையே இதற்கு பின்புலமாக இருக்க முடியும். ஆனால் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் அதிகம் என்றபோதும் அரபுநாடுகளில் முக்கிய பதவிகளில் பணிபுரிந்து அதிகமாக பொருளீட்டி வருபவர்கள் இந்துக்களே. இருப்பினும் வெறுப்பு ஆளுகையில் பொருளாதார இழப்பைப் பற்றியெல்லாம் இந்த தேசியவாதிகளால் கவலைப்பட்டுக் கொண்டிருக்க இயலாது என்பதை கலவரகால நாசங்களில் இருந்தே நாம் நன்கறிய முடியும்.

இதே கொரானா காலத்தில் சீனாவில் சிக்கியிருந்த 647 இந்தியர்களை திரும்ப அழைக்க 6 கோடி செலவில் ஆபரேஷன் உஹான் நடத்தியது ஏர் இந்தியா. அதே நேரத்தில் வளைகுடா இந்தியர்களை வரவழைக்கும் வந்தே பாரத் திட்டத்திற்கு முழு கட்டணம் (சலுகை ஏதுமற்ற) வசூலிக்கப்படும் என்று அறிவித்தது. ஒரு டிக்கெட் விலை ₹1,00,000 வரை இருக்கும் என்றும் பயமுறுத்தியது. விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சீக்காளியாக இருப்பதால், வேலை – சம்பளம் ஏதுமின்றி நோஞ்சானாக இருக்கும் பணியாளர்களிடம் (கொள்ளையடித்து) வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று காரணம் வேறு  சொன்னார் மாண்பமை ஒன்றிய ராஜாங்க மந்திரி. த்தனைக்கும் குவைத் அரசு தாங்கள் இலவசமாக அனைவரையும் இந்தியாவிற்கு எங்கள் செலவில் அனுப்பி வைக்கிறோம் என்று சொன்னதற்கும் இந்தியா உடன்படவில்லை. குவைத்தில் பணிபுரியும் சுமார் 12 லட்சம் இந்தியர்களின் நிலைமை குறித்து முடிவெடுக்க அப்போது (மே 2020) குவைத் அரசு மேலும் 5 நாட்கள் அவகாசம் அளித்தது.. அப்படியும் முடிவெடுக்காமல் மேலும் கால தாமதம் செய்தால் இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இனி வேலை வாய்ப்பு விசா வழங்கப் போவதில்லை என்று தீர்மானித்தது. இதுதான் கோடிக்கணக்கில் அந்நிய செலாவணியை ஈட்டித்தந்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்பால் இந்த தேசம் காட்டும் அக்கறை. இதற்கு தனித்துறை வேறுவைத்து சம்பவம் செய்யப் போகிறார்களாம்.

குவைத்தின் சலுகைக்குத் தலைசாய்த்தால் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்களிடம் சுரண்டித் தின்ன முடியாதே என்கிற தவிப்பில் தங்க முட்டையிடும் வாத்தை ஒரேயடியாக அறுத்துவிடவே முடிவெடுத்து இந்திய அரசு. ஏற்கனவே தங்கள் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வாங்கும் பரிதாபத்திற்குரிய தொழிலாளர்களிடம் தான் இந்த பணம் பறிக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை டினார்கள். இந்த சமயத்தில் குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்து பிடிபட்டவர்களின் நிலை இன்னும் மோசமானது. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அரசு, மீண்டும் முறையாக குவைத் வருவதற்கான பாதையையும் திறந்து வைத்தது. முன்னர் அப்படி அவர்கள் மீண்டும் வர முடியாத அளவிற்கு அவர்களின் கைரேகைகள், அங்க அடையாளங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து திருப்பி அனுப்புவார்கள். இப்போது அப்படியில்லாமல் சலுகை காட்டப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அரசின் தயவில் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் குறித்தும் கவலைப்படாத இந்தியா, அமீரகத்தில் மோசடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட BR ஷெட்டியின் குடும்பத்தை ரகசியமாக மீட்டுக் கொண்டு வந்தது.

இப்படித்தான் கத்தாரில் வசிக்கும் இந்தியர்களை இலவசமாக அழைத்துச் செல்கிறேன் பேர்வழி என்று கத்தர் அரசிடம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் பயணிகளிடம் தலா 700 ரியால்களை (சுமார் 15000 ரூபாய்) வசூலித்த மோசடியை அறிந்து கத்தர் அரசு ஏர் இந்தியா விமானத்தைத் தரை இறங்க விடவில்லை.. இந்த சம்பவத்தால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு தரை லோக்கலுக்கு இறங்கியது. மேலும் குவைத்தைப் பொறுத்த மட்டில் நிலைமை சீரடைய இன்னும் ஒரு வருடகாலம் பிடிக்கும் என்பதால் இந்தியர்கள் தாயகம் திரும்பியே ஆக வேண்டிய நிர்பந்தத்தையும் காசாக்க முனைந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். முதலில் விமானத்திற்கு கட்டணம், அடுத்து தனிமைப்படுத்தும் (quarantine) கட்டணம். இதற்காக நகரங்களில் உள்ள தங்கும் விடுதிகளைத் தயார்நிலையில் வைக்க உத்தரவிட்டார்கள். புதுவையை சுற்றியுள்ள பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டணம் நாளொன்றுக்கு 650 என்று நிர்ணயிக்கப்பட்டது.. நொந்து போய் திரும்பும் குடிமகனை சுத்தமாக உருவிவிட்டு அனுப்பும் திட்டங்களைத் திவ்யமாக தீட்டி வைத்து சிறப்பாக காரியம் பண்ணின அரசின் பல்வேறு கோடாரிக் காம்புகள். சந்தை பொருளாதாரமும் நுகர்வு கலாச்சாரமும் எல்லாவற்றையும் பண்டங்களாகப் (commodities) பார்க்கத்தான் பயிற்றுவிக்கப் பட்டுள்ளன. கொரானா காலத்தில் அந்த பட்டியலில் பாவப்பட்ட மனிதர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

இந்த முகம்தான் தான் பாஜகவின் அசல் முகம். அப்படியே புலம்பெயர் குடிமக்களுக்காக நலத்துறை அமைக்கப்பட்டாலும் அது யாருக்காக சேவையாற்றும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவையனைத்தும் வெள்ளை காலர் உத்தியோகத்தில் இருக்கும் கோட்டு சூட்டு உப்பரிகை வாசிகளுக்காகவே இருக்கும். பாலைவன வெயிலில் பரிதவிக்கும் அழுக்கு சட்டைக்காரனுக்கு அருகில் கூட வராது.

இதற்கு அடுத்தபடியாக கொளுத்தப்பட்ட திரிதான் இன்னும் பயங்கரமாக இருக்கிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தரப்படும் எனும் அறிவிப்பு. இதில் இரண்டு வஞ்சகங்கள் இருக்கினறன. முதலாவது எங்கிருந்தோ பிழைக்க வந்தவன் மேல் காட்டப்படும் இந்த கரிசனம் மண்ணின் மைந்தர்கள் மீது காட்டப்படவில்லையே என்பது குறித்து எந்த சலனமும் இல்லை. இங்கே இன்னலிடை வாழும் விளிம்புநிலை மக்களுக்கு வீடு வாசல் வேண்டாமா? இரண்டாவது இதே வடமாநில தொழிலாளர்கள் பஞ்சையாக பராரியாக மைல்கணக்கில் அலைந்து திரிந்த போது அவர்கள் மேல் கிருமிநாசினியப் பீய்ச்சியடித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டதுதானே இந்த தொலைநோக்கு அரசு. இன்றைக்கு தமிழகத்தில் பரவலாக குடிபெயர்ந்துவிட்ட வடமாநிலத்தவர் வேலைகளை அபகரித்துவிட்டனர்கல்வி உரிமைகளைப் பறிக்கின்றனர்தொழில்களை ஏகபோகமாக்கிவிட்டனர்எல்லாவற்றிற்கும் மேலாக ஆயுததாரிகளாக அணிவகுத்து உயிர்களையும் உடமைகளையும் காவு கொள்ளும் கலவர காலாட்படையாகவும் மாறியிருக்கின்றனர். இவர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய சில விபரங்களை அறிய வேண்டியது அவசியமாகிறது.     

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர் எண்ணிக்கை 98% அதிகரித்திருக்கிறது.

வட இந்தியாவிலிருந்து தமிழக நகர்ப்புறங்களில் வேலை நிமித்தம் வந்திருப்பவர்கள் 10.67 லட்சம் என்று அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலத்தில் உள்ள மத்திய அலுவலக பணிகளில் திட்டமிட்டு உள்ளே நுழைக்கப்படும் வடமாநிலத்தவர் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். 2004 – 09 காலத்தில் லாலு யாதவ் ரயில்வே மந்திரியாக இருந்தபோது தெற்கு ரயில்வே பணிகளில் பீகாரிகள் பெருவாரியாக அமர்த்தப்பட்டனர். தற்போதும் சென்னை கோட்டத்தில் தமிழ்மொழி தேவைப்படும் உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்டப் பணியாளர், கேங்க்மேன் போன்ற பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை வேண்டுமென்றே நிராகரித்திருப்பதாக நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

இவ்வாண்டு புதிதாக ஓட்டுரிமை பெற்றுள்ள 1 கோடிக்கு அதிகமான புதிய வாக்காளர்களில் 10 முதல் 12% புலம் பெயர்ந்தவர்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொகுதிக்கு 1000 முதல் 2000 வாக்குகள்  உள்ள கட்சிகளுடனேயே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் ஆண்ட, ஆளும் கட்சிகள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வட இந்திய வாக்காளர்கள் நகர்ப்புற தொகுதிகளில் 5000 முதல் 50000 வரை நீக்கமற நிறைந்திருப்பது குறித்து அலட்டிக் கொள்ளவேயில்லை.

இன்று சந்தையில் நடைபெறும் வியாபாரங்களில் குறிப்பிடத்தக்க பங்கு வட இந்தியர் கைகளில் உள்ளது. பிளாஸ்டிக், வன்பொருள், துணி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பெரும்பகுதி அவர்கள் பிடியில் தான். இரண்டாம் நிலை நகரங்களிலும் சந்தையில் உள்ள கடைகளில் பலவற்றை அவர்களே நடத்தும் நிலை. அரசியல் அறிவியல் பயிலும் ஒரு உ.பி மாணவர் சொல்வதைப் போல, “இந்தி தெரியாமல் டெல்லியில் ஒரு தென் இந்தியன் பேருந்தில் கூட சினேகமாக பயணித்து விட முடியாது” எனும் போது தமிழ் தெரியாத ஒரு சேட்டு இங்கு கோடிக்கணக்கில் வணிகம் செய்ய முடிகிறது.

அதிகரித்துவரும் வட இந்தியர்களின் எண்ணிக்கை நம்பிக்கை மற்றும் கலாச்சார ஊடுருவல்களை எளிமை யாக்கியிருக்கிறது. 80களின் இறுதியில் எங்கும் வியாபித்த ராமர் குறியீட்டு சின்னங்கள் தொடர்ந்து வெவ்வேறு பரிணாமங்களை எட்டி இன்றைக்கு தென் மாநில கார், ஆட்டோ கண்ணாடிகளில் கோபக்கார அனுமான்முறைத்துக் கொண்டிருக்கிறார். 

தென் மாநிலங்களில் இனவாரி ஈவு (demographic dividend) 2020 க்குள் உச்சபட்சமாக அதிகரிக்கும் என்று  2015 – 16 பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது.

மகப்பேறு விகிதம் தென் மாநிலங்களில் தான் குறைவாக உள்ளதாக IndiaSpend அறிக்கை தெரிவிக்கிறது.. உதாரணமாக தமிழ்நாட்டில் மகப்பேறு விகிதாச்சாரம் 1.6 என்றிருக்க, பீகாரில் 3.3 ஆக உள்ளது.. (மகப்பேறு விகிதம் என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக எத்தனை குழந்தைகள் பெறுகிறார் என்ற கணக்கு). அதிக குழந்தைப்பேறு வடமாநிலங்களில் இளைய மக்கட் தொகுதிக்கு காரணமாக அமைகிறது. தென் இந்தியா வயது முதிர்ந்ததாகவும் வட இந்தியா இளமையாகவும் மாறிக் கொண்டே இருக்கிறது.

நமக்கு இதெல்லாம் இயல்பாக நடப்பதைப்போல் தெரிகிறது அல்லது தெரிய வைக்கப்படுகிறது எனில் இங்கே பொருளாதாரமும் அரசியலும் வெவ்வேறு ஏற்பாடுகளில் நடப்பதாக நாம் ஒரு தப்பான அபிப்பிராயத்தில் மூழ்கிக் கிடக்கிறோம் என்று பொருள். இரண்டும் ஒரே ஊர்தியைத் தாங்கிச் செல்லும் தண்டவாளங்கள்.. அந்த ஊர்தி செலுத்தப்படுகிறதே தவிர தானாகவே ஓடுவதில்லை.

இதுகாறும் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாயும் வளங்களும் மட்டும் வட மாநிலங்களுக்குத் திருப்பிவிடப்பட்டது எனில் இனி தமிழ் மண்ணே இந்திக்காரனுக்கு தாரைவார்க்கப்பட்டு தக்ஷிண பிரதேசம் ஆவதைக் கும்மியடித்துக் குலவையிட்டு வரவேற்கலாம். ஒரு மாநிலத்தின் நலன்களுக்கு – அந்த மக்களின் விருப்பங்களுக்கு எதிரானதை வாக்குறுதிகளாக கொடுத்து ஓட்டுக் கேட்க அளவுகடந்த மமதையும் நெஞசழுத்தமும் வேண்டும். அதற்குகந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஏனெனில் இங்கு தான் கட்டபொம்மன் காலத்திலிருந்தே எட்டப்பன்கள் – எதிரிகளின் பராக்கிரமங்களை அளந்து விடுவதற்காகவே – அரண்மனைக்குள் மாறு வேடத்தில் எப்படியோ நுழைந்து விடுகிறார்கள். அவர்களோடு கூடிக்குலவி குழந்தை பெற்றுக் கொண்டதையும் சாதனையாக பீற்றிக் கொள்கிறார்கள்.

இந்த வரிசையில் தமிழகத்தில் 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிற அறிவிப்பை, ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொரானா காலத்தில் மூட்டை முடிச்சுகளோடு வெற்றி நடைபோட்ட புதிய பாரதத்தோடு இணைந்து கொண்டாடலாம். 3 கோடி ரேஷன் கார்டுகளை நீக்கி பட்டினிச் சாவுகளுக்குக் காரணமாக இருக்கும் அரசு வீட்டு வாசற்படிக்கே வந்து அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி விட்டுப்போகும் என்று வாய்பிளந்து காத்திருக்கலாம். கோவில் கருவறைக்குள் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் சிதைத்து சின்னா பின்னமாக்கும் கூட்டத்திற்கு கொடி பிடித்து ஆலிங்கணம் செய்கிறவர்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என நம்பி ஏமாந்து போகலாம். அல்லது அப்படி வஞ்சிக்கப்படும் பெண்களின் சடலங்களைக் கூட சந்தடியின்றி எரியூட்டும் ஜோதியில் ஐக்கியமாகி விடலாம். அல்லது அந்த பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளில் பரிதவித்து அலறிய அபலைகளின் அவலக் குரலில் கரைத்துவிடலாம். இல்லையெனில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண்களின் ஆடைகளைக் கிழித்தெறிந்து வெறிபிடித்த ஓநாய்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் வடமாநில பெண்களின் அடியாட் கும்பலை இங்கும் வளர்த்தெடுக்கலாம். அதே போல் அனைத்துக் கோவில்களையும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தனியார் வசம் ஒப்படைத்து விட்டால் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் இஷ்டத்துக்கும் வைக்கும் ரேட்டில் தெய்வக் கடாட்சம் பெற்று பிறவிப் பெருங்கடல் நீந்தலாம். நுழைவுத் தேர்வுகள் தொடங்கி புதிய கல்விக் கொள்கை முழுதுமாக அமுல்படுத்தப்படும் கல்விச் சூழலில் நமது பிள்ளைகள் 3வது, 5வது, 8வதில் வடிகட்டப்பட்டுமக்குப் பசங்களைப் பெருகவிட்டு மாடு மேய்க்க அனுப்பலாம்.

இல்லை.. இன்னமும் எங்கள் தொலைநோக்கு முன்னோக்கித்தான். பகுத்தறிவுதான் இங்கே எங்களது பறையாக என்றென்றும் முழங்குகிறது. மத வெறுப்பு, சாதி சழக்குகள், புராண புனைசுருட்டுக் கதைகள், தகுதி – திறமை கதையாடல்கள் போன்ற மாய்மாலங்களைக் காட்டி எங்களைக் கற்காலத்து அழைத்துப் போவது இம்மியளவும் செல்லாது… தமிழ்நாடு பத்திரமாகவே இருக்கும் என்ற பிரகடனமே ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் அது முற்றிலும் நம் விரல் முனைகளில் தான் இருக்கிறது என்பதை மறக்காமல் இருப்போம்.

எழுத்தாளர்

லியாக்கத் அலி கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *