“ஏதோ ஒரு தூண்டுதலின் அடிப்படையில் என்ன நிகழும் என்பதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் நான் குதித்து விட்டேன்.” என்று கூறுகிறார் முஹம்மது மாணிக், இவர் மேற்கு வங்கத்தின் மல்நடி எனும் இடத்திற்கு அருகில் நடந்த துர்கா பூஜை விழாவில் ஆற்று நீரில் மூழ்கவிருந்த ஒன்பது பேரை காப்பாற்றி தற்போதைய இணையதள பிரபலமாக திகழ்கிறார்.

எதிர்பாராத விதமாக அந்த திடீர் வெள்ளத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாணிக், மல்பஜார் எனும் கிராமத்திற்கு அருகே உள்ள மேற்கு திசிமாலா எனும் பகுதியை சேர்ந்தவர். வெல்டராகிய இவர் தன் மனைவி, ஆண் குழந்தை, தன் இளைய தம்பி மற்றும் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

“அனைத்து வருடங்களையும் போல்தான், நான் துர்கா பூஜாவிற்கு சென்று கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு திருவிழாவை ரசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த ஆண்டானது என்னுடைய வாழ்க்கையின் மிகவும் வேதனை மிகுந்த நேரமாக மாறிவிட்டது” என்று முகமது மாணிக் மக்தூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆற்றுத் தண்ணீரின் அளவு திடீரென்று மிகவும் ஆபத்தான அளவிற்கு உயர்ந்து விட்டது மற்றும் சில நொடிகளிலேயே வேகமும் அதிகரித்துவிட்டது. இவை அனைத்துமே இரவு 8.30 மணியளவில் அதாவது மாணிக் அந்த இடத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே நடைபெற்றிருக்கிறது.

“அது மிகவும் பயங்கரமான சூழல், மக்கள் ஓட ஆரம்பித்து விட்டனர் ஏற்கனவே ஆற்றிற்குள் இறங்கியவர்கள் மிகவும் கவலைக்கிடமாக மற்றும் தங்களால் முடிந்த அளவிற்கு நீந்திக் கொண்டிருந்தனர். ஏதோ ஒரு தூண்டுதலின் அடிப்படையில் என்ன நிகழும் என்பதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் நான் குதித்து விட்டேன். என்னால் மக்களை காப்பாற்ற முடியும் என்று தெரிந்தது. என் காலில் மட்டும் காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் நான் இந்த பேரழிவிலிருந்து இன்னும் அதிகமான உயிர்களை காப்பாற்றி இருப்பேன் என்று கூறினார் முஹம்மது மாணிக்.”

மக்களை காப்பாற்றுவதற்கான இவரின் ஓட்டத்தில் இவரின் வலது கால்விரலில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு அங்கிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் தன்னுடைய கைக்குட்டையை கொடுத்து உதவியுள்ளார். அதனை தன் காலில் இறுக்கமாக கட்டிவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசத்தை தொடர்ந்துள்ளார்.

மாணிக் அன்றே 11 மணி வரை அதாவது தன்னுடல்  கைவிடும் வரையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். மாணிக்கை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு தொண்டர்களும் குதித்துள்ளனர். அதி விரைவிலேயே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர்.

ஏன் நீங்கள் ஆண்டுதோறும் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறீர்கள் என்று வினவப்பட்டதற்கு “இது எங்களுடைய கலாச்சாரம். இங்கே மேற்கு வங்கத்தில் நாங்கள் அனைவரும் மற்றவர்களின் விழாக்களில் மகிழ்ச்சியுடனும் மிகுந்த பாசத்துடனும் கலந்து கொள்வோம். இங்கு இந்து முஸ்லிம் பிரச்சினை கிடையாது மற்றும் எங்கெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றதோ அங்கெல்லாம் வன்முறைகளை நிறுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் இதன் மூலம் அனைவருடைய வாழ்க்கை மட்டுமே பாதிக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

மக்கள் எந்த உதவியுமே இன்றி கத்திக் கொண்டிருந்தபோது இவர் ஆற்றின் மணல்மேடுகள் மற்றும் பாறைகளின் மீது மாட்டிக் கொண்டிருந்த மக்களை கரை சேர்த்துள்ளார்.

“அந்த சத்தங்கள் எல்லாம் எனக்கு இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இச்சம்பவம் நடந்ததிலிருந்து என்னால் சரியாக சாப்பிடவே முடியவில்லை. அது மிகவும் சோகமான நிகழ்வு அதனை என் நினைவில் இருந்து வெளியேற்ற முடியவில்லை”.

மாணிக் இதற்கு முன்னமே இரண்டு சமூக நல அமைப்புகளுடன் இணைந்து இரத்ததான முகாம்கள் நடத்துவது, ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உடை அளிப்பது போன்ற சேவைகளை செய்து வந்துள்ளார்.

“எங்களுடைய குழுவில் அனைத்து நம்பிக்கைகளை சார்ந்த மக்களுமே இருக்கின்றனர்” என்று மாணிக் கூறுகிறார்.

தமிழில்

– ஹபிபுர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *