LOADING

Type to search

Why No BJP அரசியல் சமூகம்

பஷீர் தாத்தாக்களை அறிவோம்

admin 5 months ago
Share

கட்டுரையாளர் – – ‘ப்ரியன்’ காஜா

மதிய நேரத்தின் உச்சி வெயிலில் ATM – அறையை நோக்கி பணமெடுக்க விரையும் போது நெடுநாள் பழகிய ஒருவரைக் கடந்து செல்வதாய் ஒரு பிரக்ஞை. வேகத்தைக் குறைத்து பின்னோக்கி திரும்பினால் நரைப்பதற்கு இதற்குமேல் தலையில் முடி இல்லாமல், தளர்ந்து போய் ஒரு காவலாளி. ஆமாம் பஷீர் தாத்தா. பத்தாண்டுகளுக்கு முன்பு ஊர் கிராமத்தில் பண்ணையார் போன்று வலம் வந்தவர். இன்று வறுமைக்கான சாட்சி முகத்தையும், வற்றிய வயிற்றுடன் இங்கே. அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்ததில் நகர விரிவாக்கம் என அரசிடம் பறிகொடுத்த நிலத்தைப்பற்றியும், தோட்டத்தைச் சுற்றி சுற்றி வந்த பறவைகளைப் பற்றியும் விசனப்பட்டுக் கொண்டதை இப்போதும் மறக்க முடியாது.இதில் மேலும் வேதனை என்னவென்றால் இன்னும் லட்சக்கணக்கான பஷீர் தாத்தாக்களை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் காத்திருக்கிறது இந்த பாசிச பாஜக அரசு.

எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களான காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றச் சொல்லும் தீர்ப்புதான் அது. 40 இலட்சம் பழங்குடியின மக்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழ்வதாக ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது 500 சரணாலயங்களையும், 90 தேசியப் பூங்காக்களையும் உள்ளடக்கியது. இவற்றின் பாதுகாவலர்களாக விளங்குபவர்கள் அரசு அங்கீகாரத்திற்கு ஏங்கும் இந்தப் பழங்குடிகளே.
நீதிபதி அருண் மிஸ்ரா வழங்கிய வனப்பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையிலான இந்தத் தீர்ப்பு கிட்டத்தட்ட 11 இலட்சம் பழங்குடிகளை வெளியேற்ற காத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பைப் பற்றி கூர்ந்து கவனித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் மூத்த செய்தியாளர் நிதின் சேதி, “சுதந்திர இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சட்டப்பூர்வ பழங்குடிகள் வெளியேற்றம்” என மனம் வெதும்பி கூறியிருக்கிறார்.

சரி..! இவர்கள் வெளியேற்றப்படுவதால் யாருக்கு என்ன நஷ்டம்? காடுகள் பாதுகாப்புக்கு அரசு எடுக்கும் முயற்சியை வரவேற்க்கக் கூடாதா..? என்றெல்லாம் அரசின் செயல்பாடுகளை ஆமோதிப்பவர்கள் உயிர்ச் சங்கிலி, பல்லுயிர் பாதுகாப்பு, கனிம வள பாதுகாப்பு, காலங்காலமாக ஒடுக்கப்படுவர்களின் அடிப்படை மனித உரிமைகள் என்றெல்லாம் தன் அடிப்படை மனித இயல்புகளிலிருந்து தேடலைத் தொடங்கினால் விடைகளைப் பெற முடியும். மனித வாழ்க்கை சமநிலைக்கு நம்மைச் சுற்றியிருக்கிற சிறுசிறு பூச்சிகளில் இருந்து யானைகள் வரை அத்தியாவசியத் தேவை. அந்தச் சமநிலையைப் பாதுகாப்பவர்கள் வீட்டுக்கொரு குளிர்சாதனக் கருவியையும், ஆளுக்கொரு இரு சக்கர வாகனத்தையும், தேவைக்கதிமாக எலக்ட்ரானிக் சாதனங்களையும் பயன்படுத்தும் நாமல்ல. இயற்கையோடு இயற்கையாய், பணம் மீது பற்றுக் கொள்ளமால், ஒரு எளிமையான அடிப்படை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பழங்குடியின மக்களே.

இதற்கு உதாரணமாய் பரத்பூர் பறவைகள் சரணாலயமும், பந்திப்பூரில் சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயையும் சொல்லலாம். பரத்பூர் சரணாலயாத்தில் தங்கியிருந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டபின் பறவைகள் வரத்து படிப்படியாய் குறைந்தது. காரணத்தை தேடிப் பார்க்கையில் அங்குள்ள நீர்நிலைகள் புதர்மண்டி கண்ணுக்கேத் தெரியாமல் போனதுதான் காரணம். அங்கு பழங்குடிகள் இருக்கும் வரை அந்த நீர்நிலைகள் மிகச் சிறப்பாய் பராமரிக்கப்பட்டு வந்தது.பறவைகள் வரத்தும் சிறப்பாய் இருந்தது. அதேபோல், பந்திப்பூர் சரணாலயத்தில் சீவாங்குச்சிகளையும், காய்ந்த இலைகளையும் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தி வந்த பழங்குடிகள் திடீரென்று ஒருநாள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேற்றப்பட்ட சிலகாலத்திலேயே காட்டுத்தீயால் சரணாலயம் வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்தது.

வனங்களைச் சார்ந்தே தன் வாழ்வை வழக்கமாக்கிக் கொண்ட பழங்குடிகளின் வாழ்வு வனப்பாதுகாப்புச் சட்டம் என்கிற பெயரில் சூறையாடப்பட்ட வரலாற்றை நாம் அறிந்து கொள்வது அவர்கள் பக்க நியாயத்தை நாம் அறிந்து கொள்ள அவசியமாகிறது. கி.பி. 1846 – ல் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் முதன்முதலில் ‘வனச்சட்டம்’ என்பதை அறிமுகப்படுத்தி காடுகளின் வளத்தை தன் வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. 1856 – ல் வனத்துறை என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு 1865 – ல் இருந்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த ஆணைகள் வனப்பகுதியை ஆங்கில அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து பழங்குடிகள் வனப் பகுதியில் சுதந்திரமாக உலவுவதைத் தடை செய்தது. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கபட்டது. இதன் பின்னர் காடுகள் தேயிலை தோட்டத்திற்காகவும், காபி தோட்டத்திற்காகவும் சிதைக்கப்பட்டு வனமகன்கள் அவற்றில் கூலிக்காரர்களாக அங்கேயே பணியமர்த்தப்பட்டார்கள்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் பழங்குடிகளுக்கான பஞ்சசீலக் கொள்கை ஒன்றை வடிவமைத்து 1952 – ல் வெளியிட்டார். அதில் மிகவும் வலியுறுத்தப்பட்ட அம்சம் பழங்குடியினரின் சமூக மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி அவர்களுக்கான முன்னேற்றப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பது. ஆனால், அதனை கிஞ்சீற்றும் கருத்தில் கொள்ளாமல் அவர்கள் வாழ்வு சிதைக்கப்பட்டதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற வனப்பாதுகாப்பு சட்டத்திருத்தங்களால் அவர்கள் வனத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதே உணர்ச்சி பாயும் உதாரணங்கள். இவ்வளவு இழப்பிற்குப் பிறகும் இவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் வனப்பாதுகாப்புச் சட்டம் 2006 இவர்களுக்கான உரிமையை ஓரளவிற்கேனும் காத்தது. அதிலும் சிறப்பாக, வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் வசிக்கும் பழங்குடிகளை அவர்கள் ஓப்புதலுடன் மட்டுமே மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதுவரை அவர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என்கிற அம்சம் அவர்களுக்கு அரணாய் நின்றது.
ஆனால், தற்போதைய இந்தத் தீர்ப்பு முன்னேற்றம், உள்கட்டமைப்பு என்கிற மாயாஜால வார்த்தைகள் மூலம் அந்த அரணைச் சிதைக்கத் துடிக்கிறது. பழங்குடிகளுக்கெதிரான இந்த வழக்கின் ஆரம்பப்புள்ளி 2008 – ல் “வைல்ட்லைஃப் ஃபர்ஸ்ட்” என்கிற கார்ப்பரேட்களுக்கு ஆதரவான ஒரு அமைப்பின் மூலம் தொடங்கியது. பிறகு, பாஜக அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பழங்குடிகளை வெளியேற்றி கார்ப்பரேட்களுக்கு காடுகளின் வளங்களை பங்கு வைக்கும் வேலையை படுவேகத்தில் செய்யத் தொடங்கியது. கடந்த 2014 – லிருந்து 2018 – இறுதி வரை ஏறக்குறைய 698 திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து காடுகளின் வளங்களையும், பழங்குடியின மக்களின் வாழ்வையும் சிதைக்கும் அரும்பணியை பாஜக அரசு செய்து வருகிறது.

ஓடிசாவின் நியமகிரி மலைப்பகுதியின் கனிம வளங்களை வேதாந்தா நிறுவனம் சுரண்டிக் கொள்ள எல்லா உரிமைகளையும் வழங்கி, அதனைத் தடுக்கும் நியமகிரியின் பழங்குடி மக்களை அழித்தொழிக்கும் எல்லா ஈன வேலைகளையும் பாஜக இன்றுவரை செய்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் கூட, பாதிக்கப்ட்டவர்கள் பக்கம் நின்று வாதாட வேண்டிய அரசுதரப்பு வழக்கறிஞர்கள் பலமுறை ஆஜராகமல் இருந்ததிலிருந்தே ஆளும் பாஜக-வின் மக்கள் விரோத நடவடிக்கையை புரிந்து கொள்ளலாம். கார்ப்பரேட்களின் லாபவெறிக்கு துணையாய் நின்று தன் பாசிச வெறியைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் பாஜக அரசால் இந்தப் பழங்குடிகள் பஷீர் தாத்தாக்களைப் போல் இழந்த வாழ்வின் நினைவுகளையும், இருக்கும் வாழ்வின் சோகக் கையிருப்புகளையும் எண்ணி வாழ வேண்டியதுதான்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *