LOADING

Type to search

சமூகம்

மேட்டூர் அணை திறக்காமல் ஏமாறறிய தமிழக அரசு

Share

உங்களுக்கு உணவளிப்பது விவசாயிகள் தான் மாண்புமிகு ஆட்சியாளர்களே

ஜீன் 12 ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாள்.இந்த நாளில் தான் குறுவை சாகுபடிக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.அந்த நீரைக் கொண்டு குறுவை சாகுபடியை மேற்கொண்டு விளைச்சலை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு தமிழக விவசாயியும் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சி வருகின்றன.சுதந்திர இந்தியாவில் சரியாக ஜீன் 12 அன்று 13 முறை மட்டுமே மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.2008 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட மேட்டூர் அணை ஜீன் 12 அன்று திறக்கப்படவில்லை.வட கிழக்கு பருவ மழையை கணக்கில் கொண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியிலிருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திறக்கப்பட்டால் தான் குறுவை சாகுபடியை முறையாக மேற்கொள்ள முடியும், காலம் தாழ்த்தி தண்ணீர் திறக்கும் போது அந்த நேரத்தில் அதிக அளவில் மழை பெய்தால் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்து விடும்.தண்ணீரும் திறக்காமல் மழையும் பெய்யாமல் இருந்தால் பயிர்கள் கருகி நாசமடைந்து விடும்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அரசு தண்ணீரை திறக்க மறுத்தாலும் இறைவன் தன் அருள் மழையை பொழிந்து விவசாயிகளையும்,மக்களையும் காப்பாற்றி விட்டிருக்கிறான்.ஆனால் தற்போது எல்லாம் பருவ மழை சரியான நேரத்தில் பெய்வதில்லை,அவ்வாறு பெய்தாலும் மரம்,காடு உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிப்பால் மழை நீர் சேகரிக்கப்படாமல் வீணாக கடலில் கலந்து அந்த நீர் தொடர்ந்து வீணாகி கொண்டே வருகிறது.இறைவன் தன் மக்களுக்கு அருள் புரிந்தாலும் அதை அழித்து சதி செய்கின்றனர் பெருமுதலாளிகள், தன் சுய நலத்திற்க்காக மட்டுமே செயல்படும் ஆட்சியாளர்களின் துணையோடு.

காவிரி நீரை முறையாக பெற வேண்டும் என பல ஆண்டுகளாக நடைபெற்ற தமிழக விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக அவர்கள் கேட்ட ஆணையம் அமைக்கப்படாவிட்டாலும் வாரியமாவது கிடைத்துள்ளது.இதை பயன்படுத்தி தமிழகத்தில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள விவசாயத்தை காப்பாற்றி விடலாம் என்கிற நம்பிக்கை விதையை விதைத்துக் கொண்டனர் விவசாயிகள். இந்த தீர்ப்பு தமிழகத்தை வஞ்சிக்கும் தீர்ப்பாக இருந்தாலும் நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்பதால் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.இதை உறுதி செய்யும் வகையில் முதல்கட்டமாக ஜீன் 12 ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோழர் நல்லக்கண்ணு போன்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மேட்டூர் அணை இந்த வருடம் திறக்கப்படாது என சட்டமன்றத்தில் அறிவித்தார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நானும் ஒரு விவசாயி என எப்போதும் பெருமைப்படும் அதே பழனிச்சாமி தான் விவசாயிகள் தலையில் இடி விழக்கூடிய வகையில் அறிவித்தார்.இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்கள் தண்ணீர் திறக்க முடியாது என அறிக்கை வாயிலாகவும்,பத்திரிக்கை செய்தி வாயிலாக மட்டுமே கூறி வந்தனர். ஆனால் விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக இந்த அரசு இருந்து வருகிறது என கூறும் முதலமைச்சர் பழனிச்சாமி சட்டமன்றத்திலேயே மேட்டூர் அணையை ஜீன் 12 அன்று திறக்க முடியாது என கூறியதன் மூலம் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டியுள்ளார் என விவசாயிகள் வேதனையோடு குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்ந்து மத்திய அரசு மட்டுமல்லாது,மாநில அரசும் தமிழக விவசாயிகளுக்கு எதிராகவே இருந்து வருகிறது என்பது தெளிவாக தெரிந்து விட்டது இந்த அறிவிப்பின் மூலம். மணல் குவாரிகளை திறக்க ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட தமிழக அரசு மேட்டூர் அணையை திறக்க மறுக்கிறது.பிரதமரோடு உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் ஜீன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்திருக்கலாம், ஆனால் அதை முதலமைச்சர் செய்ய மறுத்துவிட்டார் எனவும் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

நீரை கேட்டு காத்திருந்த விவசாயிகளுக்கு இம்முறையும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.தமிழக விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்கள் போல் நடத்தும் மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு முறை உணவருந்தும் போதும் விவசாயிகளை நினைத்து பார்த்தால் மட்டுமே கூட போதும் அவர்களுக்குள் ஆங்காங்கே ஒளிந்து கொண்டிருக்கும் மனிதம் விவசாயிகளை காப்பதற்கு முன்வரும். ஆனால் தாங்கள் அருந்தும் உணவிலிருந்து இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் வரை எல்லாவற்றிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் காரணம் என்பதால் 24*7 அவர்களை மட்டுமே சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் கார்ப்பரேட்டுகளால் ஒரு சிறு நெல்லை கூட உற்பத்தி செய்ய முடியாது என என்று உணர்வார்களோ அன்று தான் விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் விடிவு பிறக்கும்.

 

உணர்வார்களா ஆட்சியாளர்கள்..!!!!?????

-முஜாஹித்

ஊடகவியலாளர்

Tags:

1 Comments

  1. கை விரிக்கும் காவிரி…

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *