வாட்சப் வதந்தி ஒரு உயிரைக் காவு கொண்டுவிட்டது..!

இரண்டு நாட்களாக குழந்தைகள் கடத்தல் தொடர்பாக வாட்சப்பில் பரவிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இன்று திருவண்ணாமலையில் கோவில் வழிபாட்டிற்கு வந்த ஒரு குடும்பத்தினரை குழந்தைக் கடத்தல் கும்பல் என்று 500க்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியதில் ஏறக்குறைய 60 வயதை நெருங்கும் ஒரு பெண்மணி கொல்லப்பட்டுள்ளார். அவர் செய்த தவறு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தது..இத்தனைக்கும் அவர்கள் தாக்கப்பட்ட போது தங்களது பாஸ்ப்போர்ட்டை எடுத்துக் காட்டியுள்ளனர். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அங்கிருந்த ஒருவர் கூட இல்லை. அனைவரையும் வாட்சப் தகவல்கள் போதையேற்றி வைத்திருக்கிறது.

வரிசையாக குழந்தைகள் வன்புணர்வு செய்திகள் வந்தபோது குழந்தைகள் மீது இயல்பான பாசம் உள்ளவர்கள், குழந்தை இல்லாத ஏக்கத்தை உறவினர், அண்டை வீட்டு குழந்தைகளை கொஞ்சுவதன் மூலம் தீர்த்துக் கொண்டவர்கள் இனி குழந்தைகளை நெருங்கினாலே தவறான முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்று அஞ்சத் துவங்கினார்கள். இப்போது இந்த சம்பவத்தால் குழந்தைகளின் அருகில் கூட நெருங்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. என் சகோதரி இந்த செய்தியைப் பார்த்துவிட்டு என்னிடம் தெருவில் எந்த குழந்தைக்கும் எதுவும் வாங்கித் தந்துடாத தம்பி என்று அறிவுறுத்துகிறார், இந்த நிலைக்கு யார் காரணம்?

இரு தினங்களுக்கு முன்பு நண்பர் சில புகைப்படங்களை பகிர்ந்து குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்ப வேண்டாம் என்ற செய்தியையும் பகிர்ந்திருந்தார். அவர் அனுப்பிய புகைப்படங்களில் சில ஜாக்டோ-ஜியோ போராட்டத்தைத் தடுக்க சுங்கச் சாவடிகளில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் புகைப்படங்களும் இருந்தது.  இப்படித்தான் போலியான தகவல்கள் பகிரப்படுகின்றன.

இன்று படித்தவர், பாமரர் என்று அனைவரும் வாட்சப் பயன்படுத்துகின்றனர். இதில் குறைந்தபட்ச கல்வியறிவு பெற்றவர்கள், வரும் தகவல்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பிவிடக் கூடியவர்கள். அவர்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் உண்மைத்தன்மையினை பகுத்தறிந்து, செய்திகளை வடிகட்டி அனுப்ப வேண்டிய பொறுப்பு படித்தவர்களுக்குத் தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் வரும் செய்திகளை அப்படியே பகிராமல் சில ஒழுங்கு நடைமுறைகளை சேர்த்து பகிரலாம் அல்லது எதுவும் செய்யாமல் சும்மா இருக்கலாம். குற்றம் செய்பவர்களை விட அதனைத் தூண்டியவர்களுக்குத் தானே குற்றத்தில் பங்கு அதிகம்?

நிற்கக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நம்மவர்கள் இது போன்ற தவறான தகவல்களை ஏதோ சமுதாயத்திற்கு செய்யும் தன்னால் இயன்ற சேவை என்பது போல மனதில் உயர்வாக எண்ணிக் கொண்டு பகிர்ந்துவிட்டு நிம்மதியுடன் அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிடுகின்றனர். போதாக்குறைக்கு செய்தியுடன் தமிழனாக இருந்தால், இந்தியனாக இருந்தால், முஸ்லிமாக இருந்தால் என்று டிஸ்கி வேறு உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறது. ஆனால் சொல்லப்படும் செய்தி எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி ஒருவரும் சிந்திப்பதில்லை. விளைவு இத்தகைய துர்மரணங்கள்.

குழந்தைக் கடத்தல் செய்தி உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உண்மை வாசல்படியைத் தாண்டுவதற்குள், அதனுடன் சேர்த்து பரப்பப்பட்ட பொய் உலகத்தை சுற்றி வந்துவிட்டது. மலேசியாவில் இருந்து வந்து கோவிலுக்கு வழிகேட்ட அந்த குடும்பத்தினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை வாட்சப்பில் வலம் வரும் குழந்தைக் கடத்தல் செய்திகள் பற்றி. குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த அந்த மூதாட்டிக்கு தெரிந்திருக்காது அது அவரது உயிருக்கு உலை வைக்கப் போகிறது என்று..வந்தாரை வாழ வைக்கும் பாரம்பரியம் உள்ள தமிழ்நாடு, வழி கேட்டு வந்தாரை சாகடித்துவிட்டது என்று இனி வரலாறு பேசும். பலருக்கும் இது இயல்பாக கடந்து சென்றுவிடும் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால்  அப்படி கடந்துவிடக் கூடாது. நமது சமூக பொறுப்புணர்வால் பிறருக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, தீமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. இல்லையென்றால் நாம் பயின்ற கல்விக்கு அர்த்தம் இல்லை.

படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் – மகாகவி பாரதியார்

 

அபுல் ஹசன்

1,981 thoughts on “படித்தவன் பாவம் செய்தால்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *