LOADING

Type to search

அரசியல்

அநீதியே நீதியானால்..

Share

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே நீதிநெறிமுறை எனும் வழக்கிழந்த சொற்றொடரை நெடுங்காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மை நிலை இதற்கு முற்றிலும் முரணாய் உள்ளது.

நமது தேசத்திற்கு விரோதமான கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அதிகாரமிக்க உயர் பதவிகளில் ஆனந்தமாய் அமர்ந்துள்ளனர். சிலர் குறைந்தபட்ச தண்டனைதான் பெற்றுள்ளனர், இன்னும் சிலரது வழக்குகள் முறையாக நடத்தப்படவே இல்லை. அதே வேளையில், எந்தவித குற்றமும் செய்யாத அப்பாவிகளுக்கு அல்லது சிறிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாடு, நீதித் துறையின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

குற்றம் இழைத்தவர்கள் யாராயினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், குற்றத்திற்கு தண்டனை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது மிகவும் கவலையளிக்கக் கூடியதாய் இருக்கிறது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன், கடந்த ஜூலை மாதம் 30ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். இதன் மூலம், வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரம் முதலியவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

யாகூபை தூக்கிலிட்டது சரியா? தவறா? மரண தண்டனை தேவை தானா? ஆளும் அரசு ஓட்டு வங்கிக்காக செய்துள்ளதா? நீதித்துறை பாரபட்சம் காட்டுகிறதா? போன்ற கேள்விகள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.

கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் மும்பையில் 13 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் மொத்தம் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். அதை ஒட்டி, 129 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு 2007ல் தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவர் உயிரிழந்தார். உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் 10 பேருக்கு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால், யாகூப் மேமனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மட்டும் குறைக்கப்படவே இல்லை. 1994ல் இருந்து யாகூப் சிறைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை 22 ஆண்டுகளாக சிறைப்படுத்தி வைத்திருந்ததே ஒரு தண்டனை அல்லவா!

தடா சட்டத்தைக் கொண்டே யாகூபுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் உச்ச நீதிமன்றத்தை பலமுறை அணுகியும் எந்தப் பயனும் இல்லாமல் போனது. அவர் அளித்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருமுறை நிராகரித்தார். மகாராஷ்டிர ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மனுவும் தூக்கிலிடுவதற்கு முந்தைய நாள் மாலை நிராகரிக்கப்பட்டது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் தூக்கிலிட்டுவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியது. அதன் பிறகு, யாகூப் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்ச்சிகளும் வீணாயின. சமூக ஆர்வலர்களது எல்லாப் போராட்டங்களும் பாழாயின. இறுதியில், நாக்பூர் மத்திய சிறையில் ஜூலை 30ஆம் நாள் காலை 6.35 மணிக்கு, அவரது பிறந்த நாளிலேயே யாகூப் தூக்கிலேற்றப்பட்டார். யாகூபின் உடலை அவரது அண்ணன் சுலைமான் பெற்றுக் கொண்டார்.

யாகூப் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? அவர் குண்டு வெடிப்பு நிகழ்த்தி மக்களைக் கொன்றார் என்பதல்ல. குற்றவாளிகள் பாகிஸ்தான் செல்வதற்கு டிக்கட் எடுத்துக் கொடுத்தார் என்பதே. மேலும், பட்டயக் கணக்காளரான (CA) யாகூப் மேமன் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட அவரது சகோதரர் முஸ்தாக் மேமன் (எ) டைகர் மேமனின் அலுவலக கணக்கை பார்த்துக் கொண்டார் என்பவை இவர் மீதான குற்றச்சாட்டுகள். எனினும், நிதி உதவி வேண்டுமென்றே செய்யவில்லை என்றே யாகூப் கூறிவந்தார்.

“டைகர் மேமனின் தம்பியாக பிறந்ததற்காக தூக்கிலிடுங்கள், ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் என தூக்கிலிடுவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று யாகூப் ஆதங்கப்பட்டார்.

உண்மையில் குண்டு வெடிக்கச் செய்தவர்கள் குறைந்தபட்ச தண்டனையையே பெற்றுள்ளனர் அல்லது அவர்களது மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது. டைகர் மேமன், அயூப், தாவூத் இப்ராகிம் ஆகிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல், சரணடைந்த யாகூபை தண்டித்துள்ளனர்.

சாமானிய மக்களுக்கு யாகூப் மேமன் வழக்கின் விவரங்கள் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. நேரடியாக குண்டு வைப்பில் யாகூப் ஈடுபட்டார் என்றே பலர் கருதுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு, பொது மக்களின் பழி வாங்கும் மனோ நிலையைத் திருப்திபடுத்துவதற்கு அரசாங்கமும், நீதிமன்றமும் ஒருவரை தூக்கிலிடுவது அப்பட்டமான படுகொலையே தவிர வேறில்லை.

இதே மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்த, 1992-93 பாபர் மசூதி இடிப்பை ஒட்டிய கலவரங்களில் 900 முஸ்லிம்கள் சிவசேனா குண்டர்களால் கொல்லப்பட்டனர். சொத்துகள் சூறையாடப்பட்டன. 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை கமிஷன் குற்றவாளிகளை அடையாளம் காட்டியது. ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., சிவசேனா முதலிய சங்கப்பரிவாரங்களையும் அதற்கு துணை நின்ற காவல் துறை குறித்தும் ஆதரங்களுடன் குற்றச்சாட்டுகளைச் சமர்பித்தது. மேலும், பாபர் பள்ளிவாசலில் இதற்குண்டான அடித்தளம் இடப்பட்டது என்றும் குறிப்பிட்டது. இந்தப் படுகொலைகளை முன்னின்று நடத்திய பால் தாக்ரேவும் அவரைச் சார்ந்தவர்களும் வன்செயலில் ஈடுபட்டார்கள் என்பதை தோலுரித்துக் காட்டிய ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனின் பரிந்துரையின் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

தேச விரோதமான அட்டுழியங்களை தொடர்ந்து செய்துவரும் சிவசேனா யாகூப் மேமனுக்கு கருணை காட்ட கோரியவர்களை தேச விரோதிகள் என்கிறது. மக்களை பிளவு படுத்துவதையே குறிக்கோளாய் கொண்டு மக்களின் நிம்மதியைக் குலைக்க பாடுபடுவதுதான் இவர்களின் பார்வையில் தேசபக்தி போலும்.

“மராட்டியம் மராட்டியருக்கே” என்ற கோஷத்துடன் சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரே செய்த வன்முறைகளையோ கலகத்தை ஏற்படுத்துவதற்காகவே விநாயகர் ஊர்வலம் நடத்தியதையோ, மராட்டிய மன்னர் சிவாஜியை வைத்து அரசியல் செய்ததையோ அரசாங்கம் பொருட்படுத்தியதா? அவருக்கு நீதித் துறை தண்டனை வழங்கியதா? “என்னை ஒன்றும் செய்ய முடியாது” என சவால் விடும் அளவுக்கு தாக்ரே துணிச்சலுடன் இருந்தார். பின்னாளில், பால் தாக்ரே மரணத்தை அரசு ராஜ மரியாதையுடன் தகனம் செய்தது தனிக் கதை.

யார் தவறு செய்தாலும் தண்டிக்கத் தானே வேண்டும். அப்படியானால், சங்கப் பரிவாரங்கள் செய்த அட்டூழியங்களுக்கு ஏன் இன்னும் தண்டனை விதிக்கப்படவில்லை எனும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இன்னொரு கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு வகையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கொடூரமான குற்றத்தை செய்தவருக்கு வழங்கப்படும் தண்டனையைவிட குற்றத்திற்கு துணை நின்றார் என்ற காரணத்திற்காக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. யாகூப் வழக்கில்கூட இதுதான் நடந்தது.

2002 குஜராத் கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காவித் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். திட்டமிட்டு செய்யப்பட்ட அந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்கள் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் வெளியே வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

குஜராத் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டபோதும், அவருக்கு வெறும் 28 ஆண்டுகளே சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அதுவும் தளர்த்தப்பட்டு, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட அதே நாளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் இச்செயல் நீதியைக் கேலிக் கூத்தாக்கும் நடவடிக்கை இல்லையா! இதே நரோடா பாட்டியா வழக்கில் பாபு பஜ்ரங்கி எனும் கொடியவனுக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டு சிறையில் உள்ளார். பயங்கரவாத செயலில் ஈடுபட்டு, குற்றமும் நிரூபணமான பிறகும் மரண தண்டனை வழங்கப்படவில்லை.

சாத்வி பிரக்யா சிங், அசிமானந்தா, ராணுவ அதிகாரி கர்னல் பிரோகித் போன்ற காவித் தீவிரவாதிகள் மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய இடங்களில் திட்டமிட்டு குண்டு வைத்து பொது மக்களை கொன்று குவித்தனர். இந்தக் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட விவகாரத்தில் அந்தக் கொடுங்கோலர்களுக்கு நீதிமன்றம் ஏன் இன்னும் மரண தண்டனை விதிக்கவில்லை? குற்றம் நிரூபிக்கப்படாமல் “கூட்டு மனசாட்சி”யின் அடிப்படையில் அப்சல் குருவை தூக்கில் தொங்கவிட முடிகிறது. ஆனால், நிரூபிக்கப்பட்ட கொடுங்குற்றவாளிகளை அப்படி தண்டிக்க முடியவில்லை!

ஒரிஸாவில் கிரஹாம் ஸ்டைன் என்ற ஆஸ்திரேலிய பாதிரி ஒருவரை குடும்பத்துடன் உயிரோடு கொளுத்திய பஜ்ராங்தல் பயங்கரவாதி தாரா சிங்கிற்கு தூக்குத் தண்டனை மறுக்கப்பட்டது. அந்தத் தூக்கு தண்டனையை ரத்து செய்த அதே நீதிபதிகளின் கைகளால்தான் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரண தண்டனைக்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார். சட்ட ஆணையத்திற்கு அவர் அளித்த பரிந்துரையில், “கருணை மனுக்களை ஆய்வு செய்து பார்க்கும்போது பல்வேறு வழக்குகளில் சமூக, பொருளாதார ரீதியில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது” என்கிறார். மேலும், தேசிய சட்ட பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், “தீவிரவாதம் சார்ந்த வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் தலித் அல்லது மத சிறுபான்மையினர் ஆவர்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எல்லா வழக்குகளிலும் ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்வது நீதியையே மறுப்பதாகும். அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியை கேள்விக்குறியாக்குவதாகும். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. சாதி, சமய பாகுபாடு அல்லது பணக்காரன், ஏழை என்ற பாரபட்சத்தோடு சட்டத்தை நடைமுறைபடுத்தக் கூடாது. சட்டம், எல்லாத் தரப்பினரையும் ஒரே விதத்தில் அணுக வேண்டும்.

விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறையில் கழித்து, பின்னர் நிரபராதி என விடுதலையானவர்களும் இருக்கிறார்கள். ஆகவே, ஒரு நிரபராதியின் வாழ்வைப் பாழாக்கும் விதத்தில் நீதி மன்றங்கள் நடந்துகொள்ளக் கூடாது. நடுநிலையோடு வழக்கு விசாரணை நடத்தி, குற்றம் நிரூபணமானால் விரைந்து தண்டனை வழங்க வேண்டும். அநீதியே நீதியானால் நாடு அமைதி பெறாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *